தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Tuesday, October 10th, 2023

தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல்முறை மாற்றம் தொடர்பிலான யோசனை ஒன்றை நீதி அமைச்சர் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார். இதுதொடர்பில் ஆராய அமைச்சரவை உபக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர், “அரசாங்கம் தேர்தல் முறையை மாற்றுவது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதனால்தான் நான் முன்வைத்த தீர்மானத்தை ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறை சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல“ தேர்தல் முறை மாற்றம் என்ற போர்வையில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உள்ளூராட்சிமன்றங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்த இரண்டு ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் அவற்றுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான அண்மைய சந்திப்பின் போது தேர்தல் சீர்திருத்தங்கள் அல்லது எந்தவொரு தேர்தலை ஒத்திவைப்பது குறித்தும் ஒருபோதும் கலந்துரையாடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 000

Related posts: