Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம். – தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Saturday, September 19th, 2020

சந்தையில் மிளகுக்கு ஏற்பட்ட பாதிப்பு போல தேயிலை கைத்தொழிலுக்கும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தர சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சீனி, குளுக்கோஸ் வகைகள் மற்றும் சோடியம் பைகாபனேட், பெரசல்பேட் போன்ற பொருட்களைக் கலந்து தேயிலை உற்பத்தி செய்தல் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஊடகங்களின் மூலம் அறியக் கிடைக்கின்றது. அவ்வாறான தேயிலை உலக சந்தையில் நிராகரிக்கப்படுவதன் மூலம் தேயிலைக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் புகழுக்கும் உலக சந்தையில் Ceylon Tea க்கும் உள்ள கேள்விக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு எதிர்காலங்களில் எவ்வகையிலும் இடமளிக்க முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உயர் தரத்திலான தேயிலை உற்பத்தி தொடர்பாக சிறு மற்றும் மத்திய தர தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி 65 வீதத்திலிருந்து 45 வீதமாக குறைவடைவதற்கு தரம் குறைவான தேயிலை உற்பத்தி காரணமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் 705 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 45 தொழிற்சாலைகளின் முறையற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் 18 தொழிற்சாலைகளின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டதாக தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்ததுள்ளார்.

கழிவுத் தேயிலை மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை பயன்படுத்தி தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கு புலனாய்வு துறையினரின் தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட படையணி மற்றும் பொலிஸாரினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கோ தேயிலை கைத்தொழிலுக்கோ தரம் குறைவான தேயிலை உற்பத்தி தடையாக அமைவதற்கு இடமளிக்கக்கூடாது. உயர் தரத்திலான தேயிலையை உலக சந்தைக்கு வழங்குவதற்கு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த தரத்திலான தேயிலை உற்பத்திக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதனையும் தாண்டி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் தொழிற்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: