தேர்தல்கள் இடைநிறுத்தப்படும் – மகிந்த தேசப்பிரிய!

Friday, December 29th, 2017

தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வட்டாரமொன்றில் வன்முறையொன்று இடம்பெற்று பதற்றமான சூழ்நிலை காணப்படுமாயின் தேர்தல் இடைநிறுத்தும் நிலை ஏற்படுமெனவும் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளு+ராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று புதன்கிழமை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சிச் செயலாளர்களை சந்தித்து பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

வேட்பாளர் ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் தான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என பதாகை கட்ட முடியும். எனினும் ஒலிபெருக்கி பயன்படுத்த முடியாது. அதேநேரம் வட்டாரமொன்றுக்கு ஒரு கட்சி காரியாலயம் அமைக்க முடியும். இதற்கான விண்ணப்பத்தில் கிராம சேவகரின் ஒப்பத்துடன் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் பொலிஸாரிடம் அனுமதி பெற்றே அதனை அமைக்க முடியும்.

பிரசாரக் கூட்டமொன்று நடத்துவதாயின் அதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன் பிரசாரத்துக்கு ஒலிபெருக்கியோ, பவலோ அல்லது மெகா போன் பாவித்தாலும் அனுமதி பெற வேண்டும்.

வீடுவீடாகச் சென்று பிரசாரத்துக்கு பத்து பேருக்கு மேல் கூட்டாகச் செல்ல முடியாது. மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் வேட்பாளர்களது புகைப்படங்களை வைத்திருக்க முடியும். சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. சுவரொட்டிகள் ஒட்டினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர், தான் வசிக்கும் வீட்டுக்கு முன்னாலும் சுவரொட்டி ஒட்டக்கூடாது.

தற்போது புதுவருட காலம் என்பதால் பரிசுப் பொருட்கள் வழங்கி பிரசாரத்துக்கு அதனைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் வருடாவருடம் பரிசு வழங்கலாம். இம்முறை இவ்வாறான நிகழ்வில் பங்குபற்ற முடியாது. உங்கள் உறவினர்கள் பரிசுகளை வழங்கி லாபம் தேட முற்படுவது தொடர்பில் முறைப்பாடு வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related posts: