தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024

தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக 09 மாகாணங்களின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கல்வித்துறையின் நான்கு பிரிவுகளை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருந்தார்.

இதேநேரம் இன்று வழங்கப்படும் பாடசாலை சீருடையில் 80 வீதம் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். எஞ்சிய 20 சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் பெற்றுகொடுக்கப்பட்டது. 

அத்துடன் இந்திய கடன் உதவியில் கிடைத்த கடதாசியை கொண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனால் உரிய தினத்தில் பாடப்புத்தங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளது. 

அரச அச்சீட்டு பணிகளில் இலாபம் ஈட்டவும் முடிந்துள்ளது.  அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க அரசாங்கம் 19 பில்லியன்களை செலவிடுகிறது. 

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதமாகிவரும் சாதாரண தர பரீட்சைகளை 2025 ஆம் ஆண்டிலிருந்து உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேபோல் கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பெரும் பங்களிப்பு வழங்குகிறார்.  உலகிற்கு பொருத்தமான வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். இந்த அனைத்து வேலைத்திட்டத்துடனும் உலகை வெல்லக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: