வான்பாய்கின்றது கட்டுக்கரை குளம் – பாலியாறு பெருக்கெடுப்பு – கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்பு!

Saturday, December 16th, 2023

மன்னாரில் நேற்றையதினம் மதியம்முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.

குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது .

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட, தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 72 குடும்பங்களை சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளதுடன் பாலியாறு பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்ற மையினால் அவ் வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மக்கள் பாதுகாப்புடன் செயல்படுவதோடு அவசர உதவிக்கு மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொலைபேசி இலக்கமான 023-2250133 தொடர்பு கொள்ளவும். அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் அவசர தொடர்புகளுக்கு 076-1258120 இலக்கத்தை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: