சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023

டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .

பூநகரி குளத்திலிருந்து கிளிநொச்சி உப பிரிவு வரையில் தேவையாக பரிமாற்ற இணைப்பு கட்டமைப்புக்களை நிர்மாணித்தல் உள்ளடங்கலான 700 மெகாவோட் சூரிய சக்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு மின்சார சபையின் பொறியியலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், நாடு இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு மேற்படி பிரச்சினைகளே காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்களின் வரவு செலவு மீதான விவாதத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி –

‘‘பூநகரி திட்டத்தின் கீழ் ஏரியொன்றை அமைத்து 20,000 ஏக்கரில் மீண்டும் விவசாயம் செய்ய வாய்ப்பு உள்ளது. அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் எனர்ஜி நிறுவனம் வழங்கிய மின்கலங்களை அடிப்படையாகக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி கட்டமைப்பை முதன்முறையாக இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு மின்சார சபையின் பொறியிலாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களுக்கு நிலக்கரி மற்றும் எரிபொருள் என்பவற்றின் வாயிலாக இலஞ்சம் கிடைக்கிறது. ஆனாலும் சூரிய மற்றும் காற்றுச் சக்திகள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முன்பிருந்தே பொறியியலாளர்கள் குழுவொன்று எதிர்பு தெரிவித்தது. 2003 ஆம் ஆண்டில் நாம் நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தினோம். அது அந்த இடத்திற்கு பொருத்தமற்றது. இருப்பினும் அவர்களுக்கு நுரைச்சோலையை அமைக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. திருகோணமலை அல்லது வேறு பகுதிகளில் அந்த உற்பத்தி நிலையத்தை அமைத்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது.

இவ்வாறான வேலைத்திட்டங்களுக்காக சில நிறுவனங்கள் 30 – 40 வருடங்கள் வரையில் கோருகின்றன. எமது நாட்டின் சட்டத்துக்கமை 20 வருடங்கள் மாத்திரமே வழங்க முடியும். அதனால் அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அதற்குரிய அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதோடு, தற்போதுள்ள முறைகளால் நாட்டை அபிவிருத்து செய்ய முடியாது. மின்சார சபை பொறியிலளார்கள் சிலரது எதிர்ப்பே நாம் இந்நிலையில் இருப்பதற்கு காரணமாகும்.‘‘ என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளை அரங்கேற்றிய மட்டக்களப்பு இளைஞர்கள் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு!
நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதியுச்ச அதிகாரம் பயன்பட...