தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி!

Tuesday, December 22nd, 2020

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டதே தவிர அதனை இந்தியாவுக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக – கிழக்கு முனையம் குறித்து செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டவர்களுக்கு வழங்க கடந்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதை போன்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ வழங்க இரகசியமாக செயற்பட்டது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பிற நாட்டவருக்கு முழுமையாக வழங்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கொழும்பு துறைமுகத்தின் முனையங்கள் உள்ளூர் முதலீட்டாளர்களினால் கூட அபிவிருத்தி செய்யப்படவில்லை.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய உள்ளூர் முதலீட்டாளர்கள் எவருமே இதுவரை முன்வரவில்லை. இதன் காரணதாகவே முனைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் துறைமுக அதிகார சபை கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சு மட்டத்தில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையினை கொண்டே தீர்மானம் எடுக்கப்படும். அதேநேரம் கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்குத் தான் வழங்க வேண்டும் என அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கவில்லை. அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக எதிர்க் கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் குற்றம் சாட்டுகிறார்கள். எம்.சி.சி ஒப்பந்தம் குறித்தும் இவர்கள் இவ்வாறே குறிப்பிட்டார்கள். இறுதியில் அனைத்தும் பொய்யாக்கப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: