தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றச்சாட்டு!

Thursday, February 10th, 2022

மஹிந்த ராஜபக்ச அரசைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசின் பயணத்தைத் தடுப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வு அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன.  

ஆனாலும்’ எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டவாறு, விவசாயப் பெருமக்களின் வருமானத்தை நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கவும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினரின் நலனை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், எவ்வாறான தடைகள் ஏற்படினும் தொடர்ந்து முன்னோக்கி நகர்வோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்துபவர்கள், பொதுமக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

அரச ஊழியர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். புத்தெழுச்சிபெற்று வருகின்ற பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, நாட்டை முடக்காமல் அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயற்படுத்த இடமளிப்பதே இன்றைய தேவையாக உள்ளது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!
குரங்கம்மையை தடுக்க கைகளை கழுவுதலே பிரதான தடுப்புமுறை - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் தீ...
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு கல்வியில் நீண்டகால ந...