தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை பாரபட்சமின்றி அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் வந்த அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Thursday, September 9th, 2021

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனைவரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கான மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நீங்கள் ஒன்றே பார்த்துக்கொள்ள முடியும் தற்போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது அது பல மில்லியன் ரூபா மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

அதுபோல பல்வேறுபட்ட குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்றன எனவே தற்போதைய அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பிரிவினையை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது

எனினும் தற்போது எமக்கு கொரோனா என்ற ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. கொரோனா  வைரஸ் என்ற தடையையும் தாண்டி அதனை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தோடு இந்த அபிவிருத்தியினையும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது

அதோடு தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு  தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்கு ரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மேலும் நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக.  தற்போது சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதற்கு பொலிசார் தயாராக உள்ளார்கள்.

எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றால் அந்த வன்முறை சம்பவம் தொடர்பில் உரிய போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததன் மூலம் குறித்த வன்முறைச் சம்பவங்களோடு தொடர்பானவர்களை  கைது செய்து கொள்ள முடியுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று செப்டம்பர் 9 மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இன்று மதியம் வருகைதந்த அவர் சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம், ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம், யாழ்.மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றை பார்வையிட்டார்.

மேலும் பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம்,பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண – கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும் அமைச்சர் நாமல் பார்வையிட்டிருந்தார்.

நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: