அச்சுவேலி வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் போராட்டம்!

Monday, July 25th, 2016
கடந்த சனிக்கிழமை (23) அதிகாலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிற்றூழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அவசரசிகிச்சைப் பிரிவு தவிர்ந்த வெளிநோயாளர் பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பிரதான கதவினை மூடி வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிற்றூழியர் சங்க செயற்பாட்டாளர் இராசேந்திரன் முகுந்தன் கூறுகையில் –

ஆலயத்துக்கு நிகராக போற்றப்படும் வைத்தியசாலையில் சிற்றூழியர் ஒருவரை மதுபோதையில் வந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இது ஒரு கொலை முயற்சியாகும்.

நோயாளர்களை காப்பாற்றும் உன்னத கடமையினை மேற்கொண்டு வரும் வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள் போற்றப்படவேண்டியவர்கள். இவ்வாறு வைத்தியசாலையில் வைத்து ஒரு கொலை முயற்சி இடம்பெற்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சனிக்கிழமை (23) மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால், பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. பிரதான சந்தேக நபரை கைது செய்யும் வரை நாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம்’ என்றார்.

‘அவ்வாறு பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய தவறும் பட்சத்தில் வடமாகாணம் பூராகவும் சிற்றூழியர்களை அழைத்து தொழில் சங்க நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த தில்லை ரவிச்சந்திரன் என்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: