பிள்ளையான்கட்டு இந்து மயானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்கள் : நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மக்கள் அமைதி வழிப் போராட்டம்

Wednesday, March 30th, 2016

ஜே.208 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக் கட்டுவன் பிள்ளையான் கட்டு இந்து மயானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்கள்  அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புன்னாலைக் கட்டுவன் வடக்குப் பகுதி மக்கள் இன்று  (30)  காலை -10 மணியளவில்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  அமைதி வழிப் போராட்டத்தில்  ஈடுபட்டனர் .

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் “எமது மயானத்தில் அத்துமீறிய குடியேற்றத்தை வெளியேற்று”  ” மரணத்தின் பின்பும் எமக்கு அமைதி இல்லையா?  வலி. தெற்குப் பிரதேச சபையே பதில் சொல் ….!”   ” எமது மயானத்தின் விடயத்தில்  பிரதேச சபை, பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பது ஏன்? ”  “இறுதிக் கிரியைகளை நிம்மதியாகச் செய்வது எப்போது? ”  போன்ற பதாதைகளைக் கைகளில் ஏந்தியிருந்தனர். மேற்படி விடயம் சம்பந்தமாகச் சுட்டிக் காட்டிப்  போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சார்பாக  அரசாங்க அதிபரிடம்  மகஜரொன்றும்  கையளிக்கப்பட்டது.

மகஜரைப் பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் , உடுவில் பிரதேச செயலர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் , தான் இந்த விடயம் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்தி மயானத்திற்குரிய காணியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் உறுதியளித்தார்.

686b5639-f224-490a-8bef-7f13a7d6e0f2

Related posts: