தென்னைச்  செய்கையாளர்களுக்கு மானியம்!  

Thursday, October 26th, 2017

வடக்கு மாகாணத்தில் தென்னைச் செய்கையாளர்கள் வட்டி மானியம் பெற்று தென்னைச் செய்கையை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்..

வடக்கு மாகாணத்தில் தென்னைச் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக தென்னைச் செய்கைக்கு மானியம் வழங்கி வருகின்றோம். இவர்களுக்குத் தென்னம் கன்றுகள்  சேதனப்பசளை ஊடு பயிர்ச்செய்கை வட்டி மானியம் நீர்ப்பாசன மானியம் அசேதன உரமானியம் ஆகியனவற்றை வழங்கி வருகின்றோம். இவர்களுக்கான மானியங்களை வழங்குவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் மாவட்ட ரீதியில்  கிராமங்கள் தோறும் தென்னை கற்பகதரு சங்கங்களை அமைத்து வருகின்றோம்.

இவற்றுக்கான பதிவுகளைப் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் மேற்கொண்டு வருகின்றோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் 333 தென்னை கற்பகதரு சங்கங்களை அமைத்துள்ளோம்.

தென்னைப் பயிர்ச் செய்கையில் மக்கள் ஈடுபட விரும்பினால் அதற்குரிய மானியம் ஆலோசனைகளை வழங்க நாம் தயாராக உள்ளோம். அரை ஏக்கர் தொடக்கம் 30 ஏக்கர் வரையான நிலப் பகுதிக்கு தென்னைப் பயிர்ச்செய்கை மானியம் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கான வட்டி மானியமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

வருடத்துக்கான வட்டியாக 9 வீதம் அறவிடப்படும். இவ்வாறு 30 ஏக்கர் வரையில் 3 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்படும். இந்தக் கடன்களைப் பெற்று எமது ஆலோசனையைப் பின்பற்றி தென்னைச் செய்கையை மேற் கொள்ளமுடியும். ஒரு ஏக்கரில் 64 தென்னைகளை நடமுடியும்.

வட்டி மானியத்தைப் பெற விரும்புபவர்கள் தத்தமது பிரதேசத்தில் உள்ள கமநலகேந்திர நிலையம் அல்லது கற்பகதரு சங்கங்களின் ஊடாக விண்ணப்பங்களை பெற முடியும். அதன் பின்னர் தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையினால் தென்னைப் பயிர்ச் செய்கைக்கான நிலப்பரப்பு பார்வையிடப்பட்டு ஏக்கருக்கு ஏற்ப கடன் தொகைகள் வழங்கப்படும். வழங்கப்படும் கடன் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தும் பட்சத்தில் வருடத்துக்கு 9 வீத வட்டியாக அறவிடப்பட்ட 12 ஆயிரம் ரூபா மீளவும் அவர்களுக்கு மானியமாக வழங்கப்படும். ஆகவே இவ்வாறான கடன்களைப் பெற்று தென்னைச் செய்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும்  – என்றார்.

Related posts: