துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75 வீதமானவை இலங்கையர்களுக்கே – விதிமுறை கொண்டுவரப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021

கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு இல்லாதபோது குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழு இடம் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பின் போது சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய அனைத்து ஆலோசனைகள் கட்டளைகள்  உள்ளடக்கப்படும் .சகோதர கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டபின் மசோதாவில் மேலும் திருத்தங்களை உள்ளடக்க முடியும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்..

இப்புதிய கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானம் கடந்த 2014 செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதொன்று. இந்த கட்டுமானத்திற்கு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி சீ ஜின் பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதியான எனது தலைமையிலேயே அடிக்கல் நாட்டப்பட்டது.

அவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பாரிய திட்டத்தின் மூலம் இன்று 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை இலங்கையுடன் இணைப்பதற்கு முடிந்துள்ளது.

அப்புதிய நிலப்பரப்பு 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முந்தைய அரசாங்கத்தினால் கொழும்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதுடன், இதுவரை ‘கொழும்பு துறைமுக நகரம்’ என்று குறிப்பிடப்படுவதன் மூலம், இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் வாய்ப்புகள் பலவற்றை பெற்றுக்கொள்ள எமக்கு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் முழு பலன்களையும் பெறுவதற்கு, இந்த நகர்ப்புற வளாகத்தின் மூலம் பாரிய முதலீடுகளை நாட்டினுள் ஈர்ப்பதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக கட்டமைப்பை சரியாக நிறுவ வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு இப்போது ஒரு சிறப்பு பொறுப்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த கட்டமைப்பை நமக்கு சரியாக தயாரிக்க முடியுமாயின், அதனூடாக நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புதிய நகர கட்டுமான பணிகளின் ஊடாக முதல் 5 ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும் முதல் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக சுமார் எண்பத்து மூவாயிரம் புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாய்ப்பு கிட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அத்துடன் இப்புதிய நகரத்தில் முதலீடு செய்ய முன்வரும் அனைத்து முதலீட்டாளர்களும் எவ்வித தடைகளும் இன்றி புதிய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உகந்த வணிகச் சூழல் அமைய வேண்டும்.

2014 ஆம் ஆண்டில், உலக வங்கியின் ‘வணிக வசதி’ சர்வதேச தரவரிசையில் இலங்கை 85ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால் 2019 இல் இலங்கை 99ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் நாங்கள் முதலிடத்தைப் பிடித்தோம், ஆனால் 2019 இல், அது 4 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

எனவே, சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதில் நம் நாடு பின்தங்கியிருந்தது. அந்த சூழ்நிலையிலிருந்து கூடிய விரைவில் வெளியேற முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்ய, நாட்டில் முதலீட்டாளர்களை எளிதாக்குவதற்கு நாங்கள் உழைக்க வேண்டும் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் முக்கிய கூறுகளில் ஒன்றாக, நம் நாட்டின் இந்த புதிய துறைமுக நகரத்தில் எங்கள் வணிக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

இன்று எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர்மறையான செயற்பாடு காரணமாக நம் நாட்டிற்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள அனுகூலத்தின் பங்குதாரர்களாக விளங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே, குறுகிய அரசியல் கோணங்களில் இருந்து நோக்காது, நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர்கள் அந்த வாய்ப்பின் பலன்களை பெற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

அதன்படி, இந்த புதிய நகரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, இன்றைய எதிர்க்கட்சியிலிருந்தும் கூட, நாட்டிற்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்க நீங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு செய்தால், அதுவே சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் அனுப்பும் சிறந்த செய்தியாகும். அத்தகைய செய்தியின் மூலம் நம் நாட்டிற்குள ஈர்க்கப்படும் முதலீட்டின் அளவு வேகமாக அதிகரிக்கும் என்று நாம் உறுதியாகக் கூறலாம். அப்போது இத்திட்டத்தின் வெற்றியை நாம் அனைவரும் கட்சி பேதமின்றி அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின் எமது நாட்டை நேசிக்கும், நாட்டின் எதிர்கால பயணத்தை ஆசீர்வதிக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கட்சி பேதமின்றி இச்சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுத் தருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: