பிரசர் கருவிகள் பற்றாக்குறை:  சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளர்கள் அவதி!

Friday, December 1st, 2017

குருதிஅமுக்கப் பரிசோதனைக் கருவி (பிரசர் கருவி) யினுடைய பற்றாக்குறை காரணமாக சாவகச்சேரி மருத்துவமனையின் பொது மருத்துவக் கிளினிக்கில் 500 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் மணிக் கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதி செவ்வாய்க்கிழமைகளில் பொது மருத்துவக்கிளினிக்கும் பிரதி வியாழக்கிழமைகளில் நீரிழிவுக் கிளினிக்கும் சாவகச்சேரி மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.

பிரதி வாரமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்தக் கிளினிக்குகளில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் அரைவாசிப்பேர் பரிசோதனை மூலமும் அரைவாசிப்பேர் மீள் திகதியிடல் முலமும் சிகிச்சை பெறுகின்றனர். கிளினிக்குகளில் பொது மருத்துவ நிபுணர் உட்பட மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் கடமையாற்றுகின்றனர். அவர்கள் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட மின்கலத்தில் இயங்கும் குருதி அமுக்கப் பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்துகின்றனர். அந்தக் கிளினிக்குகளுக்கு இரண்டு பரிசோதனைக்கருவிகளே வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பொது மருத்துவ நிபுணரிடமும் மற்றது மருத்துவர்களிடமும் உள்ளது. இவற்றை வைத்துக் கொண்டே கிளினிக்குகளுக்கு வந்த 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளையும் மருத்துவர்கள் பரிசோதிக்கவேண்டும். இதனாலேயே பெருமளவு நோயாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அந்தக் கருவி மூலம் ஒரு நோயாளியைப் பரிசோதிக்க ஆறு நிமிடங்கள் செல்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னர் இருந்த கருவி மூலம் ஒரு மணித்தியாலத்தில் 20 நோயாளர்களை மருத்துவர்கள் பார்வையிட்டனர். புதிய பரிசோதனைக்கருவியால் ஒரு மணித்தியாலத்திற்கு 10 நோயாளர்களை மட்டும் பரிசோதிக்க முடிகிறது. மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பரிசோதனைக் கருவியையே கிளினிக்குகளில் மாறி மாறிப் பயன்படுத்துகின்றனர். முன்னர் காலை 8 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரை நடைபெற்ற கிளினிக் தற்போது மாலை 4 மணி வரை இடம்பெறுகின்றது. இதனால் சிகிச்சை பெறவந்த நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.

மருத்துவமனையிலுள்ள 10 விடுதிகளுடன் வெளிநோயாளர் பிரிவு அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் கிளினிக் பாவனைக்கென 15 க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கருவிகள் தேவைப்படுகின்ற போதிலும் குறைந்த அளவு கருவிகளே எமக்கு வழங்கப்பட்டன.

இதனால் மருத்துவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கிளினிக்கின் நேரத்தையும் அதிகரிக்க வேண்டியநிலை காணப்படுகிறது. பிரதேசத்திலுள்ள பொது நலன்விரும்பிகள் பரோபகாரிகள் மனமுவந்து அமுக்கப் பரிசோதனைக் கருவிகளை வழங்கி உதவினால் நோயாளர்களுக்கு சிரமமின்றி சிகிச்சைகளை வழங்கமுடியும்.

அமுக்கப் பரிசோதனைக் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்க விரும்புவோர் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் அவை தொடர்பான விவரங்களை வழங்கமுடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related posts: