திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 4th, 2023

கொழும்பு மாநகர சபையுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் உரிய முறையில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய, அமைச்சின் செயலாளரினால் தகுந்த முறைமையை தயாரிப்பதற்காக நிபுணர் தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொழும்பு மாநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் நீண்ட தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை மேற்கொண்டு நிபுணர் தொழில்நுட்பக் குழு தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, முதற்கட்டத்தின் கீழ் திட்டத்தைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் சுமார் 2 தசம் 125 பில்லியன் ரூபா செலவாகும்.

அத்துடன், இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 300 மெற்றிக் டன் குப்பைகளை முகாமைத்துவம் செய்து பொருளாதார ரீதியில் பயன்பெற முடியும் என அந்தக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: