தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பாடு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினருக்கு, ஐந்து கோரிக்கைகளுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும், அடுத்த பாதீட்டுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017. 12. 07ஆம் திகதி 32/2017ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல், இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு மூன்றிலிருந்து வகுப்பு இரண்டுக்குப் பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு இரண்டிலிருந்து வகுப்பு ஒன்றுக்கு ஏழு ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல், 20,000 ரூபாய் வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல் மற்றும் தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்களின்படி 30 மணி நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல் ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் 2014.12.24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1 சதவீத மேலதிக சேவைக் கொடுப்பனவு ஆகியவற்றை எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்தின் ஊடாக வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர...
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியு...
மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – தமிழ் பிரதிநிதிகளிடம் இந்தி...