தகவல்களை மார்ச் 31 க்கு முன்னர் வழங்க கோரிக்கை – இல்லாவிடின் கொடுப்பனவுகளை இழக்க நேரிடும் என நிதியமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023

கொடுப்பனவுகளை பெற 37 இலட்சம் பேர் விண்ணப்பித்தபோதும் இதுவரை 65,000 பேரே பதிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

நிதியமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபை மூலம் வழங்கப்பட்டு வரும் சமுர்த்தி உள்ளிட்ட 52 விதமான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்த கொடுப்பனவுகளை இழக்க நேரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பதாக பதிவு நடவடிக்கைகளை நிறைவுசெய்யாவிட்டால் அந்த திட்டத்திற்காக உலக வங்கி வழங்கும் நிதியுதவி கிடைக்காமல் போகும் அபாயமுள்ளதாகவும் அவ்வாறு அந்த நிதியுதவி கிடைக்காவிட்டால் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளுக்கு இந்த மாதத்தின் பின்னர் அந்தக் கொடுப்பனவுகள் இல்லாமற் போகும் நிலை ஏற்படும் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வோர் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மேற்படி நலன்புரி சபை விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கமைய 37 இலட்சம் பேர் இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் அவர்களது தகைமையை பரிசீலிப்பதற்காக பிரதேச செயலகத்துடன் இணைந்த துறைசார்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 37 இலட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதுடன் அதில் இதுவரை 65,000 பேரே பதிவுசெய்துள்ளனர் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்துவதற்காக துறைசார்ந்த குறித்த அதிகாரிக்கு 300 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இத்தகைய அதிகாரிகள் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டி வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: