தனியார் பல்கலைக்கழகங்களின் தரநிலைகள் தொடர்பில் ஒழுங்குப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, October 19th, 2023

இலங்கையில் 24 தனியார் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றின் தரநிலைகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லாமையால் அவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் –

எமது நாட்டில் மூடிய பொருளாதாரம் காணப்பட்ட சூழலில் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கவில்லை. அவற்றுக்கு அனுமதியும் வழங்கவில்லை.

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1977ஆம் ஆண்டின் பின்னர் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிடினும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தேவை எழுந்தன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவந்து தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

அதன் பிரகாரம் உயர்கல்வி அமைச்சில் 24 தனியார் பல்கலைக்கழகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கு அப்பால் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பீடங்கள் இங்கு உள்ளன. அவற்றுக்கு கீழ் இயங்கும் பிரிவுகள் உள்ளன. அவற்றின் தரங்கள் எமக்கு தெரியாது. அவை எங்கு உள்ளன என்றும் தெரியாது. அங்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் என்னவென்றும் தெரியாது.

அரசாங்கம் அவற்றை தரநிலைப்படுத்தவில்லை. ஆகவே, உயர் தரத்திலான கல்வியை வழங்கக்கூடிய சட்டங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காலங்கடந்த ஒன்றாக உள்ளதால் புதிய சிறப்பு குழுவொன்றை அல்லது கட்டமைப்பொன்றை உருவாக்கி அரச மற்றும் தனியார் கல்வியை கொண்டுசெல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: