தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை!

Wednesday, February 2nd, 2022

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது அவசர மின்சாரம் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என கூறியுள்ள அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண, தேவைப் ஏற்பட்டால் மின்சாரத்தை கொள்வனவுத் செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூன்று வருடங்களுக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்திருந்த நிலையில், அதற்கு அரசாங்கம் உடன்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தேவை ஏற்படும்போது மாத்திரம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு மீண்டுமொருமுறை பேச்சுக்களை நடாத்துமாறும், மீண்டுமொருமுறை விலைமனு கோருமாறும் மின்சக்தி அமைச்சருக்கு அரச தலைவர் பணிப்புரை விடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே தேவை ஏற்படும்போது மின்சாரத்தை வழங்குவதற்கான விலைமனுக்களை எந்தவொரு நிறுவனங்களும் அனுப்ப முடியும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்துக்குப் பின்னர் வறட்சி நீடித்தால் மின் உற்பத்தி நிலையங்களின் திறன் போதுமானதாக இருக்காது என்பதால் கூடுதல் விநியோகம் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கடந்த ஏழு வருடங்களாக தேசிய மின்கட்டமைப்பில் கூடுதல் மின்சாரம் சேர்க்கப்படவில்லை என்று, நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: