தனிநபர் சுயவிருப்பங்களுக்காக கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் மக்களுக்கான விமோசனங்கள் கிடைக்கப்போவதில்லை – பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம்

Wednesday, March 9th, 2016

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும், அம் மாவட்டங்களின் பிரதேச செயலர் பிரிவுகளிலும் கூட்டப்படுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் வெறும் தனி நபர் பெருமைக்காகவும், கடமைக்காகவும் மாத்திரமே கூட்டப்படுவதைப் போல் கூட்டப்பட்டு, முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் வெறும் அறிக்கைகள் கோரப்பட்டு, கூடிக் கலைவதாகவே இருப்பதாகவும், இந்த நிலை மாற்றப்பட்டு, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டதைப்போன்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் முடிவுகள் எட்டப்படக்கூடிய வகையில் அவை செயற்படுவதே கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அர்த்தம் உள்ளதாக அமையுமென பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,  கடந்த காலங்களின்போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் முடிவுகள் உடனுக்குடன் எட்டப்பட்டன. சில பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அறிக்கைகள் கோரப்பட்டு கூடிய விரைவில் எட்டப்பட்டன. எந்தவொரு பிரச்சினை குறித்தும் தங்களால் பிரச்சினைகளுக்கான தீர்வினைத் தர முடியாது என்றோ, மத்திய அரசும், மாகாண சபையும்தான் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தருமென்றோ இக் கூட்டங்களின்போது பிரச்சினைகளைத் தட்டிக் கழித்தது கிடையாது. முதலமைச்சர் கௌரவ விக்ணேஸ்வரன் அவர்களும் அப்போது இணைத் தலைவராக செயற்பட்டிருக்கின்றார். எனவே, அவருக்கும் இந்த விடயம் நன்கு தெரியும்.

ஆனால், இப்போது, பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எதுவும் எட்டப்படாமல் வெறும் அறிக்கைகள் மாத்திரம் கோரப்பட்டு வருவதாகவும், பிரச்சினைகளை தம்மால் தீர்க்க முடியாது, பிரச்சினைகளை மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் எடுத்துச் சொல்லத்தான் தாங்கள் இருக்கிறோம் என சில இணைத் தலைவர்கள் கூறுவதாகவம், பிரச்சினைகளை எடுத்துக் கூறும் மக்களை அடக்கி, கருத்து கூற வாய்ப்பளிக்காது வருவதாகவம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பது அப் பிரதேச பிரச்சினைகளை ஆராய்ந்து அப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, முடிவுகளை எட்டுவதாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. இதற்கென தற்போது மாகாண சபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அதன் முதல்வரும், மத்திய அரசை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ராஜாங்க அமைச்சர் ஒருவரும், இந்த அரசுக்கு இணக்க அரசியல் என்ற வகையில் ஆதரவு தெரிவித்துவரும்  பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபிதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் கூறுவதைப்போல் சம அந்தஸ்துள்ளவர்கள் இல்லாதவிடத்தும் இவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதில் தடைகள் இருக்கப்போவதில்லை. எனினும், அதற்கான ஆற்றல், திறமை, அக்கறை என்பன இருந்தால் இவர்களால் நிச்சயமாக அவ்வாறான தீர்வுகளை, முடிவுகளை எடுக்க முடியும். ஆனால், இவர்கள் அவ்வாறான முயற்சிகளை எடுக்காமல் தட்டிக் கழித்தே வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் - ஊடகத்துறை அமைச்சர்...
புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாடு – பெண்கள் குழுவால் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாபப் பலி!
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது த...