டெங்கு பெருகும் காணிகள் அரசுடமையாக்கப்படும் – சுகாதாரத் திணைக்களத்தினர்!

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் காணப்பட்ட இரு காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற சிவப்பு அறிவித்தலை சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கல்வயல் வாகையடி ஒழுங்கையில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட பற்றைகளால் அயலில் உள்ள வீடுகளில் மூன்று பிள்ளைகள் டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு சங்கத்தானை பெரிய அரசடி வீதியில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட பற்றைகளில் உருவான டெங்கு நுளம்புகளினால் அயலில் உள்ளவர்கள் டெங்குவினால் பீடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இரு காணி உரிமையாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டும் இதுவரை காணிகள் துப்புரவு செய்யாததால் கடந்த சனிக்கிழமை இரு காணிகளையும் துப்புரவு செய்ய இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
இக்காலப்பகுதிக்குள் துப்பரவு செய்யப்படாவிடின் உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் காணி அரசுடமையாக்கப்படுமெனவும் குறிப்பிட்டு சிவப்பு அறிவித்தல் பொருத்தியுள்ளனர். தென்மராட்சிப் பிரதேசத்தில் இந்த வருடத்தின் முதல் 45 நாள்களில் 50 க்கு மேற்பட்டோர் டெங்கினால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தமது காணிகளைத் துப்பரவு செய்யாமல் பற்றையாக விடப்பட்டுள்ளதால் அதனுள் உருவாகும் டெங்கு நுளம்புகளினால் அயலவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் காணிகளை அரசுடமையாக்கும் சட்டத்தின் கீழ் காணி உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|