டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Friday, December 24th, 2021

15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருட காலப்பகுதியில், நாட்டில் 33 ஆயிரத்து 269 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 60 வீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷிலந்தி செனவரத்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

கண்டி, காலி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், திருகோணமலை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் செனவரத்ன தெரிவித்தார்.

அத்தோடு, காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைப் பெறுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மன்னாரில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளத்தை அடுத்து, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், 13 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு மாத காலமாகும் நிலையில், வெள்ளம் வழிந்தோடாமல் பேசாலை, முருகன் கோவில், பேசாலை 100 வீட்டுத் திட்டம், காட்டாஸ்பத்திரி, சிறுத்தோப்பு மற்றும் தலைமன்னார் பகுதிகளை சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமை சுகாதார சீர்கேடுகளுக்கு வித்திடுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பேசாலையில் கடந்த நவம்பர் மாதம்முதல் இதுவரையான காலத்தில் சுமார் 150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேசாலை 100 வீட்டுத்திட்டம் பகுதியில் வசித்து வந்த 13 வயதான மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதேவேளை, நாட்டின் 11 மாவட்டங்கள் டெங்கு பரவும் சிவப்பு எச்சரிக்கை வலயமாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: