டிஜிட்டல் பிரிவினை – அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் – உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மையை உருவாகியுள்ளது – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Saturday, January 20th, 2024

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் என்பன அபிவிருத்தி அடைந்துவரும்  மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மையை உருவாகியுள்ளன

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது என்றும் அதனால் சிறந்த உலகை உருவாக்க வலுவான மற்றும் ஒன்றிணைந்த அணிசேரா அமைப்பின் ஊடாக மேற்படி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..

உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவேனியின் (Yoweri Museveni) தலைமையில் 120 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த மாநாடு நேற்றும் இன்றும்(20) நடைபெற்றது.

அத்துடன் மாற்றமடைந்துவரும் உலகிற்கு ஏற்றவாறு அணிசேரா நாடுகள் அமைப்பின் நோக்கங்களை மீளமைப்புச் செய்து, தென் துருவத்தில் அதிக அங்கத்துவம் கொண்ட அமைப்பாக மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார். 

அந்த மாற்றம் செல்வந்த நாடுகளின் மோதல் மற்றும் அதற்குள் தலையீடுகள் செய்யாத நாடுகளை உள்ளீர்ப்பதற்கான அழுத்தங்களுக்கு எதிரானதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அதேபோல் தென் துருவ நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தும் நோக்கங்களை நிறைவேற்றும், பல்முனை உலகை கட்டியெழுப்புவதற்கு அணிசேரா நாடுகளின் அமைப்பு ஒத்துழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

மேலும் நாம் இப்போது பனிப்போரின் பின்னரான நிலைமைகளின் இறுதி நிலை மற்றும் மாற்றம் கண்டு வரும் பல்முனை உலகின் அணுகுமுறைகளை காண்கிறோம். புவிசார் அரசியல் முன்னணியில், முன்னைய பலவான்கள் மற்றும் பலவான்கள் என்ற அந்தஸ்த்தை தக்கைக்கும் நோக்கில் செயற்படும் தரப்பினர்களுக்கு மத்தியில் மறைமுகமான மற்றும் வெளிப்படையான மோதல்கள் மீண்டும் வெடிப்பதையும் நாம் காண்கிறோம். ஐரோப்பாவின் அட்லாண்டிக் சமுத்திரத்தின் இராணுவக் கூட்டணி வலுப்பெற்றுள்ளது. ஆயுதக் கட்டுப்பாட்டு தொடர்பிலான கடந்த கால ஒப்பந்தங்கள் முறிந்துள்ளன.

இராணுவச் செலவு வரலாற்றில் முன்னர் இல்லாத அளவை எட்டியுள்ளது. மேலும், அணு ஆயுதங்கள் குறித்து மீண்டும் பாரிய அளவில் கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும். இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களின், நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பிராந்தியத்தில் ஒரு புவிசார்-மூலோபாய போட்டி உருவாகி வருகிறது. மேலும், விண்வெளி மற்றும் சமுத்திரங்கள் மோதலுக்கு சாத்தியமான தளங்களாக மாறிவிட்டன.

பிரதான சக்திகளுக்கு இடையிலான மூலோபாய போட்டியின் காரணமாக கொள்கை அடிப்படையிலான வர்த்தக பாதுகாப்புவாதத்தின் எழுச்சியால் சுதந்திர வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு பின்னடைவை நோக்கி நகர்கிறது.  பிரிந்து செல்லல் மற்றும் இடர்பாடுகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களினால் இந்த நிலைமை மேலும்  விரிவடைந்துள்ளது.

புதிய வர்த்தக முறை குறித்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பு,  உலக வர்த்தக அமைப்பின் பன்முகத்தன்மையை மேற்கத்திய நாடுகளால் புறக்கணிக்கப்பட்டிருப்பதை காண்பிக்கிறது.

டொலர் ஒரு ஆயுதமாக மாறிவிட்டது. பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடி, காலநிலை நீதி, உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு ஆகியவை புதிய சவால்களாக மாறியுள்ளன.

டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது.

“உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளல்” என்ற இந்த மாநாட்டின் தொனிப்பொருள், நமது உலகின் இரு துருவங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கிறது.

அதில் வெற்றிகாண வேண்டும் எனில், அனைவருக்குமான சிறந்த உலகை கட்டியெழுப்புவதற்கான வலுவான மற்றும் ஒன்றுபட்ட அணிசேரா அமைப்பொன்று அவசியப்படுகிறது. இதைச் செய்ய, நாம் நம்மை மீள்கட்டமைத்துக்கொள்ள வேண்டும். அணிசேரா நாடுகளின் அமைப்பு இனியும் வலுவற்ற நாடுகளின் கூட்டாக இருக்காது.

சில ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அடைந்த விரைவான முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது என்பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்.

2050 ஆம் ஆண்டாகும்போது, உலகின் முதல் பத்துப் பொருளாதாரங்களில் பெரும்பான்மையானவை இந்த அமைப்பிற்குச் சொந்தமானவையாக இருக்கும்.

உலக விவகாரங்களில் தலைமை தாங்கக்கூடிய நாடுகள் நம்மிடையே உருவாகி வருவதையும் காணமுடிகிறது. அவர்கள் தலைமை தாங்க தயாராக இருக்க வேண்டும். ஒரு பாரிய சக்தியாக மாறுவதற்கு பழைய மற்றும் புதிய வலுவான சக்திகளுக்கு இடையே அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ புவிசார் மூலோபாய போட்டி ஏற்படும் போது நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் - ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட ...
யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 3 ஆவது தடுப்பூசி செலுத்துகை இன்றுமுதல் முன்னெடுப்ப...
வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியா பயணம் – பொருளாதார மேம்பாடுகள் குறித்து பாரதத்தின் அரச தலைவர்களுடன...