ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் – 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் விசேட உரையாற்றுகின்றார் ஜனாதிபதி!

Wednesday, September 13th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை குழுவினர் புறப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் 78 இன் போது, இளம் தலைவர்கள் உட்பட உலகத் தலைவர்கள், உலகளாவிய பாலிக்ரிசிஸை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விவாதிப்பார்கள்.

மேலும், நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான உத்திகளைக் கண்டுபிடிப்பார்கள்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்வதற்கு முன்னர், ஜனாதிபதி விக்கிரமசிங்க, G77 + சீனத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக கியூபாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து வெளியேறி இருப்பதால் அக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் மற்றும் சமூக சேவைகள் பதில் பிரதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: