ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நடவடிக்கை!

Sunday, July 17th, 2022

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை  உள்ளிட்ட கொழும்பில் உள்ள ஏனைய அரச சொத்துக்கள் மீதான சேத விபரம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து  முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச சென்றதையடுத்து , பொது மக்கள் பலரும் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றை  முற்றுகையிட்டனர்.

அங்கு இலட்சக்கணக்கான மக்கள் நுழைந்ததால், சன நெரிசலில் அங்குள்ள சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கட்டடங்களின் சொத்துக்கள் மீதான கணக்காய்வு நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் பல பழங்கால சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: