ஜனாதிபதி மாளிகை – அலரி மாளிகை சேதங்களை முழுமையாக ஆய்வுசெய்ய விசேட குழு!

Sunday, July 24th, 2022

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் வாரத்தில் குழுவொன்றை அனுப்ப தயார் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த இடங்களில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கோட்டை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியது.

கோட்டை ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்ட பின்னர் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகை ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது, மேலும் அந்த காலத்தின் பல படைப்புகள் மற்றும் வரலாற்று மதிப்புள்ள ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள், நினைவு உபகரணங்கள் மற்றும் ஆங்கிலேய காலத்தின் பிற படைப்புகள் இருந்தன.

மேலும், பல ஆங்கிலேய ஆளுநர்களும் அந்த மாளிகையில் வாழ்ந்துள்ளனர். அண்மையில், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பொதுச் சொத்துக்கள் மற்றும் தேசிய பாரம்பரியமிக்க நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களை சேதப்படுத்துவதையோ அல்லது திருடுவதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 9ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்பு வந்த மக்கள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீறி முதலில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்துனர்.

இதன் பின்னரே ஜனாதிபதி செயலகம் மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகை போன்றவற்றை ஆக்கிரமித்துள்ளனர்.

அன்றிலிருந்து, பல நாட்களாக அந்த இடங்களைப் பார்வையிட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: