ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Thursday, June 15th, 2023

ஆக்கிரமிப்புகள் நடைபெற்றால் அறியத் தாருங்கள். நடவடிக்கை எடுப்பேன் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரத்தில் உள்ள சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வர்த்தக சங்கம், அங்காடி வியாபாரிகள், நகரசபை, பிரதேச சபை, அரச அதிகாரிகள் உட்பட அனைவரையும் இணைத்து கொண்டு வர்த்தகர்கள் எதிர்நோக்ககூடிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு முடிவுகளும்  எடுக்கப்பட்டிருந்தது.

அதில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு வவுனியாவில் உள்ள உள்ளூர் சேவைகள் அதாவது தனியார், அரச பேருந்துகள் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு 5 நிமிடம் நின்று செல்வது என கலந்துரையாடப்பட்டிருக்கிறது

மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆளுநருக்கு தெரியப்படுத்தி அனுமதி பெற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.

அன்றாட வியாபாரிகளது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வழங்கி அவர்களையும் வர்த்தக சங்கத்தோடு இணைத்து பயனிக்க வைப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது. வர்த்தக சங்கங்களுக்கு இருக்க கூடிய உரிமை மாற்ற பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து அதில் பயன்பெற கூடிய வகையில் சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும். தொடர்ச்சியாக இவ்வாறாக மாதம் , மாதம் கலந்துரையாடலினை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட்டிருக்கிறது. வவுனியா மாவட்டத்தில் இல்லை. இது சம்பந்தமாக முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விரைவாக அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி படிப்படியாக இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும் அதேநேரம் ஆரம்ப கட்டணம் 150 ரூபாயும் கிலோமீற்றருக்கு 100 ரூபாயும் என்கிற வகையில் அறவிடப்படுகிறது. இது அதிக தொகை என பொதுமக்களாலும், சமூக வலைதளங்கள் ஊடாகவும், அறிந்து கொண்டேன். அதிலும் மாற்றம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் ஆக்கிரமிப்பாளர்களது ஆக்கிரமிப்பு தொடர்கிறது.  இது தொடர்பாக பொலிஸிற்கு தொலைபேசியில் தகவலை தெரியப்படுத்தினால் நேராக வந்து முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறு கூறுகிறார்கள். உரியவர் வெளி மாவட்டமாக இருந்தால் அவர்கள் அங்கிருந்து வந்து முறைப்பாடு பதிவு செய்ய முன்னர் கட்டிடம் கட்டப்பட்டிருக்கும். அல்லது வேலி அடைக்கப்பட்டிருக்கும்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டிருந்தேன் . சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் அதற்கு இணங்கியுள்ளார். ஊடகவியலாளர்களும் இது சம்பந்தமாக, எங்கும் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றால் எனக்கு அறியத் தாருங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஜனாதிபதி - மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு!
சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் - நீதி அமைச்சர் தெ...
இஸ்ரேல் – இலங்கை இடையில் நேரடி விமான சேவை – பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு மற்றுமொரு தின...