ஜனாதிபதியின் கருத்தால் மனமுடைந்துள்ளதாம் மனித உரிமைகள் ஆணைக்குழு!

Sunday, February 10th, 2019

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த விமர்சனங்களால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தைரியத்தை இழந்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்குனகொலபலஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முதலில் குறிப்பிட வேண்டும். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பையும் சட்டத்துக்கு ஏற்றவாறு அவர்கள் நடத்தப்படுவதையும் உறுதி செய்வது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமையாகும்.

சட்டத்தின் பிரகாரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் சிறைச்சாலைகள் என்பவற்றைச் சென்று பார்வையிடுவதற்கும் பரிசோதிப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் பாதுகாப்பு, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யத்தக்க வசதிகள், சுகாதார சேவை வசதிகள் மற்றும் கைதிகளை தடுத்து வைத்திருக்கும் இடங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும்.

அங்குனகொலபலஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டதையடுத்து கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மேற்கொண்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டியது எம்முடைய கடமையாகும். அது தொடர்பில் சட்டத்துக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும்.

எம்முடைய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஐ.நா. அமைதி காக்கும் படை நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்கையில் அவர்களுக்கான தகுதிச் சான்றிதழை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைத் தெரிவு செய்திருந்தது.

எமது ஆணைக்குழுவின் சுயாதீனத்துவம் மற்றும் நம்பகத்தன்மை என்பன அதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அதுமாத்திரமன்றி ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு இராணுவத்தினரை வழங்கும் அனைத்து நாடுகளிலும் தேசிய ரீதியாகத் தகுதிச் சான்றிதழை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தேசிய அமைப்பாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு விளங்குகின்றமை இலங்கைக்குப் பெருமைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொரு நிலையில் நியாயமற்ற விமர்சனங்களால் நாங்கள் அதிருப்தி அடைவது மாத்திரமன்றி எம்முடைய தைரியத்தை இழக்கும் நிலையும் உருவாகின்றது. எம்மீதான நியாயமான விமர்சனங்களை வரவேற்று ஏற்றுக்கொள்வதுடன் அவை எமது செயற்பாடுகளை இன்னமும் திறம்பட மேற்கொள்வதற்கு வழிகாட்டும் எனவும் நம்புகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: