உருளைக் கிழங்கின் விளைச்சல் அதிகரிப்பு!

Wednesday, March 6th, 2019

யாழ் மாவட்டத்தில் இம்முறை உருளைக்கிழங்கு அதிக விளைச்சலை கொடுத்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் மானிய விலையில் விதை உருளைக்கிழங்கு வழங்கப்படுவதால் உருளைக்கிழங்குச் செய்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இம்முறை 220 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 220 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் விதைப்பதற்கு என வழங்கப்பட்டன.

விதைக்கப்பட்டு 72 நாள்களின் பின்னர் அறுவடை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இம்முறை பரோடா மற்றும் சசி ஆகிய இரண்டு வகையாக உருளை கிழங்குகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இவற்றில் சசி இனத்தின் விளைச்சல் அதிகமாக கிடைத்துள்ளது. வழமையாக ஒரு கிலோ விதை உருளை கிழங்கு நடுகை செய்தால் அதில் இருந்து சுமார் 15 கிலோ கிராம் விளைச்சல் கிடைக்கும்.

ஆனால் இம்முறை விதைக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் விதை உருளை கிழங்குக்கு சுமார் 16 தொடக்கம் 22 கிலோ கிராம் வரையான விளைச்சல் கிடைத்துள்ளது. இவை தற்போது தம்புள்ளைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன.

அங்கு யாழ்ப்பாண உருளை கிழங்குக்கு பெரும் கிராக்கி என்பதால் வழமையான விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறன.

ஆரம்பத்தில் 72 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட கிழங்கு தற்போது 80 ரூபா தொடக்கம் 90 ரூபா வரையில் தம்புள்ளையில் கொள்வனவு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: