ஜனாதிபதியுடன் யாழ்.பல்கலை மாணவர்கள் இன்று சந்திப்பு.!
Tuesday, November 1st, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக சமூகத்தினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இரண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததையடுத்து மாணவர்கள்
வகுப்பு பகிஷ்கரிப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணத்தின் அழைப்பின் பேரில் மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் நேற்று முற்பகல் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து மாணவர் சங்க பிரதி நிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் பல்கலைக்கழகத்தின் பிரதானவாயிலை மூடி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் படுகொலைக்கு உரிய நீதி வழங்கக் கோரி அவர்கள் நேற்றுக்காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒன்றுகூடிய மாணவர்கள் பிரதான வாயிலை மூடியதுடன் எவரையும் உள்நுழைவதற்கு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் பல்லைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த போதிலும் உள்ளே செல்வதற்கு அவர்களை மாணவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கும் துணைவேந்தருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சந்திப்பிற்கு வருகைதரவுள்ளதாகவும், இதனால் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்குமாறும் துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்களை உள்செல்ல மாணவர்கள் அனுமதித்தனர்.
இதனையத் தொடர்ந்து அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அவரை அவரது வாகனத்தில் செல்வதற்கு அனுமதிக்காத மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்து செல்வதற்கு அனுமதி வழங்கினர். இதனையடுத்து துணைவேந்தர் திருமதி வசந்தி அரச ரட்ணம் தலைமையில் அமைச்சர் சுவாமிநாதனுடனான கூட்டம் இடம்பெற்றது. இதில் மாணவ சங்கங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவங்களுக்கு உரிய நீதி வழங்கப்படவேண்டும். அதுவரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கமானது உரிய உதவிகளை வழங்கவேண்டும். கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படவேண்டும். அந்தக் குடும்பங்களின் தொழிலற்றுள்ள சகோதர, சகோதரிகளுக்கு வேலைவாயப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்று மாணவ சங்கத் தலைவர்கள் அமைச்சரிடம் கோரியுள்ளனர். இதனைவிட ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடவேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்தே இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை பல்கலைக்கழக சமூகம் சந்தித்து பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம், மற்றும் இரண்டு விரிவுரையாளர்கள், மாணவர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை சந்தித்துபேசுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பின் போது மாணவர்கள் பலியாதன சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குறுகிய காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மாணவ சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பில் ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிர்வாக முடக்கப் போராட்டத்தை கைவிடுவதற்கு இணங்கியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் சுவாமிநாதன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்
இந்த சந்திப்பின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் மாணவர்களுடைய கோரிக்கையை என்னிடம் சமர்ப்பித்துள்ளார்கள். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய நீதிவேண்டி காலவரையறையற்று தொடர்ந்த பல்கலைக்கழக பகிஸ்கரிப்புப் போராட்டம் முடிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று மதியம் 12.30 மணியளவில் கொழும்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளோம்.
இச் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவப் பிரதிநிதிகளும் பங்கு கொள்வார்கள் அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திப்பில் கலந்து கொள்வார்.யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அதன் பின்னரான சூழல் தொடர்பாகவே இக் கலந்துரையாடல் அமையும் என தெரிவித்தார்.
கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் மரணத்துக்கு நீதி வேண்டி மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முடக்கும் வகையில் அனைத்துப் பீடங்களின் கல்வி சார் நடவடிக்கைகளையும் பகிஷ்கரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சர் சுவாமி நாதனுடனான பேச்சுவார்த்தையை அடுத்து பகிஷ்கரிப்பு போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளமையினால் இன்று பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts:
|
|
|


