சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்கு சீனா நன்றி தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய சைனாபாம் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகள் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதும், பொருத்தமானதுமாகும் என சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனாபாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களில் 95% வீதமானோர் டெல்டா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து பாதுகாப்புப் பெற கூடிய நோய் எதிர்ப்பு சக்தி விருத்தி அடைவது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை மேற்கோள்காட்டி இலங்கையில் உள்ள சீன தூதரக உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திரிபடைந்த டெல்டா வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய வகையிலான சைனாபாம் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் உலகிலேயே முதலாவதாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகியிருப்பதுடன் அவை மிகவும் வரவேற்க்கதக்கவையாக உள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும் பொருத்தமானதுமான இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர ஆகியோருக்கு எமது நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

மேற்படி ஆய்வுகளின் பிரகாரம் சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது கொவிட் 19 வைரஸின் திரிபுகளான டெல்டா மற்றும் பீட்டா ஆகியவற்றுக்கு எதிரான செயற்திறனை கொண்டிருக்கின்றன என அப்பதிவியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: