செலவுகளை குறைக்கும் தீவிர முயற்சி!யில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Tuesday, August 31st, 2021

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் அரச வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. தொடர்ச்சியான செலவுகளுக்குக் கூட அது போதுமானதாகயில்லை என நிதியமைச்சர் பசில்ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரதுறையில் ஏற்பட்ட மேலதிக செலவீனங்கள் நிவாரணம் வழங்குதல் போன்றவை காரணமாக இந்த ஆண்டுக்கான செலவீனங்கள் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாகயிருக்கும் என நிதியமைச்சர் அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும் ஆரம்பிக்கப்படாத கட்டுமானதிட்டங்கள் போன்றவற்றை நிறுத்துமாறு நிதியமைச்சு துறைசார் அமைச்சுகளிற்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று அரசசேவைகளிற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை இவ்வருடத்தின் மீண்டெழும் செலவீனங்கள் ஒரு கோடியே 2 இலட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாவாக மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தடுப்பூசி செலுத்தல், சுகாதார துறையின் நடவடிக்கைகளை விஸ்தரித்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளின் காரணமாக மீண்டெழும் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அமைச்சரவைக்கு நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த நிறுவன அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்படும்போது, அவர்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, கடமைக்களுக்காக வருகைதரும் தினங்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தும் வகையில் யோசனையொன்றை முன்வைக்குமாறு அமைச்சின் செயலாளர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பிலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: