சூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்!

Saturday, August 19th, 2017

சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கமராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்க விட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி தென்பட இருக்கும் முழு சூரிய கிரகணத்தைப் படம் பிடிப்பதற்காக அதிக உயரத்தில் பறக்கும் பலூன்களைப் பயன்படுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் முழுமையாக காணக்கூடிய வகையில் ஏற்படும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரைவாசியாக தென்படும்.

இந்தத் திட்டத்தில் நாசாவுடன் மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் 50 பலூன்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

முதல் முறையாக இந்தக் காட்சி ஒன்லைனில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது.

சூரிய கிரகணத்தின் நிழலானது ஓரிகன் மாநிலத்தில் இருந்து தெற்கு கரோலினா மாநிலத்தை நோக்கி மணிக்கு சுமார் 2400 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்படுகிறது.

1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்திற்கு பின்னர் ஏற்படும் முழுமையான கிரகணம் இதுவாகும். இந்த சூரிய கிரகணம் காரணமாக அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஏற்படவுள்ளது. இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்க பகுதியில் தென்படவிருப்பது முக்கிய அம்சமாகும்.

இதனிடையே அதே வருடம் டிசம்பர் மாதம் ஏற்படும் வலய சூரிய கிரகணத்தை இலங்கையில் தெளிவாக காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: