ஆண்டிறுதிக்குள் செயற்கை மழை!

Wednesday, June 20th, 2018

இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை மழையை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் துறை சார் நிபுணர்கள் குழு ஆராய்வுப் பணிகளுக்காக தாய்லாந்துக்கு மாத இறுதியில் பயணமாகவுள்ளது. இவ்வாறு மின்சக்தி மற்றும் மீள்சுழற்சி சக்தி பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையின் காலநிலை, தாய்லாந்தின் தென்பகுதியின் காலநிலையை ஒத்திருப்பதாக கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இலங்கையில் செயற்கை மழை உருவாக்குவதில் சிக்கல் இருக்காது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் தாய்லாந்தில் செயற்கை மழை உருவாக்குவது தொடர்பில் நேரடியாகக் கள ஆய்வு செய்ய இலங்கை அதிகாரிகள் செல்லவுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம், மையச் சுற்றாடல் அதிகார சபை, வான்படை மற்றும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவே தாய்லாந்துக்குச் செல்லவுள்ளது. இந்தத் திட்டம் வெறுமனே செயற்கை மழைத்திட்டமல்ல. மழையை முகாமைத்துவப்படுத்தும் திட்டமாகும். வறட்சிக் காலநிலையின் போது மின்சக்தியை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கும் பகுதிகளிலும் செயற்கை மழையை உருவாக்குவதுதான் நோக்கம் என்றார்.

Related posts: