சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021

சுற்றுச் சூழலை காக்க வேண்டிய அவசியத்தை மனித குலம் உணரும் அதி நெருக்கடி கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம் எனசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபச்சஇயற்கைச் சூழல் அமைப்பில், இயற்கையோடு ஒன்றித்த வாழ்வில், பாரம்பரியமான உணவுப் பழக்கங்களின் ஊடாக – எமது உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உச்ச நிலையில் பேணத் தவறியதன் விளைவை நாம் இன்று பட்டுணர்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும். இது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளாவது –

கோவிட் நோய்க்கிருமியின் தோற்றமும் அதன் கட்டுக்கடங்கா வளர்ச்சியும் – சுற்றுச்சூழல் அமைப்பை நாம் தொடர்ந்து சீரழிப்பது எத்தகைய அழிவுகரமான விளைவுகளை எமக்கே ஏற்படுத்தும் என்பதை காட்டி நிற்கின்றது.

ஒவ்வொரு மூன்று நொடிப்பொழுதுகள் கழியும் போதும், இந்த பூலோகப் பரப்பில் ஓர் கால்பந்தாட்ட மைதான பரப்பளவு காடு மனிதரால் அழிக்கப்படுகின்றது என்பது எவ்வளவு ஒரு கொடூரமான உண்மை.

காடுகளை நிரமூலமாக்க, விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடங்களை நாம் சூறையாடி அவைகளின் வாழிடப் பரப்பைக் குறைத்ததன் மூலம், கொரோன போன்ற நோய்க்கிருமிகள் பல்கிப் பெருகிப் பரவுவதற்கு உகந்த சிறந்த நிலைமைகளையே உருவாக்கியுள்ளோம்.

நாம் சுவாசிப்பதற்கான பிராண வாயி பற்றாக்குறை நோக்கி இந்த பூமி பத்து எவ்வளவு வேகமாகச் சுழன்று செல்கின்றது என்பது தொடர்பாகப் புதிதாக ஆராயவும் எதுவும் இல்லை. அந்தவகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து இயற்கையைப் பேணுவதனை ஒரு தலையாய கடமையாகக் கொண்டே எமது அரசாங்கம் செயற்படுகின்றது.

மீள்பாவனை வலுச் சக்தி உருவாக்கம், சேதனப் பசளை விவசாயம், காடுகளை அதிகரித்தல், பயன்தரும் வகையில் கழிவு முகாமைத்துவம் போன்றவற்றில் விட்டுக்கொடுக்காத ஒரு நிலைத்தகு கொள்கையை வகுத்து நாம் செயற்படுவதானது – ஒரு நீண்ட கால நோக்கில் சூழலையும் இயற்கையையும் பாதுகாப்பதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையே காட்டி நின்கின்றது.

அதே வேளையில் – ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய கொள்கைகளை வகுத்தாலும், அந்த நாட்டின் மக்கள் அவற்றை இதயசுத்தியுடன் பின்பற்றவில்லை எனின், அந்த கொள்கைகளால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த நற்பயனும் விளையப்போவதில்லை என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: