யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்-  மாங்குளம் பொலிஸாருக்கு புதிய சிக்கல்!

Wednesday, June 14th, 2017

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த வழக்கில் தலையீடு செய்த பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் சி.சதீஸகரன் முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், வழக்கில் தலையீடு செய்த மாங்குளம் பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருடன் கலந்துரையாடி, வழக்கில் தலையீடு செய்ததாக மாங்குளம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த வருடம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்திருந்தனர். குறித்த மரணம் விபத்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பிரேதபரிசோதனைகளில் ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கிச் சூட்டு காயம் இருந்ததாகவும், இதனாலேயே அம்மாணவன் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: