சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் – எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை – பிரதமர் மஹிந்த உறுதி!

Saturday, May 22nd, 2021

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மனிதர்களின் சில செயற்பாடுகள் காரணமாக மக்கள் குடிக்கும் நீர் கூட இன்று மாசுபடுகிறது. இதை கட்டளைகளால் மட்டும் இதை நிறுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் சுத்தமான நீரின் முக்கியத்துவத்தை பாடசாலை காலம்முதல் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகள் ஒரு நாள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ளனர். இன்று நாம் செய்ய வேண்டியது அவர்களின் எதிர்காலத்திற்கான தண்ணீரைப் பாதுகாப்பதாகும். அதனால் இன்று முழு உலகமும் இது குறித்து கவனம் செலுத்தி, நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசி வருகிறது.

எமது நாட்டின் மன்னர்கள் அன்று தண்ணீரின் மதிப்பை உணர்ந்து எதிர்காலத்திற்காக செய்த பணிகளின் பிரதிபலன்களை நாம் இன்றும் அனுபவித்து வருகின்றோம். பெரிய குளங்களை அமைத்து நீர்ப்பாசன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதுடன் அந்த அனைத்து இடங்களிலும் நீர் பாதுகாப்பும் இடம்பெற்றது.

வானத்தில் இருந்து விழும் ஒரு சொட்டு நீர் கூட மனிதனின் பயன்பாடின்றி வீணாக கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற மஹா பராக்கிரமபாகு மன்னனின் கூற்று இன்றைக்கும் பொருந்தும்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தகவல்களின்படி நம் நாட்டில் 50 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. அவ்வாறாயின் அனைவரும் சுத்தமான குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலப்பகுதியில் மக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து எமக்கு நேரடியாக தெரிவித்தனர். அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை. குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கொஞ்சம் தருமாறே அவர்கள் கோரினர்.

அதனால் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கி, நாடு முழுவதும் பல பாரிய நீர்வழங்கல் திட்டங்களைத் தொடங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: