சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!

Thursday, July 16th, 2020

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முன்னர் போன்றே கடைப்பிடிக்க வேண்டும் என பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படாத நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலில் நாட்டில் உருவாகிய 32 ஆவது கொத்தணி கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய கொத்தணியாகும். அதற்கு வெளியே 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 16 பேர் இராஜாங்கனையை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 4 பேர் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்களாவர். கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 831 கைதிகள் இருந்த நிலையில் 444 பேருக்கே கொரோனா தொற்றுறுதியானது.

320 உத்தியோகத்தர்களில் 63 பேருக்கே தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அங்கிருந்து அனைவருக்கும் தொற்றுறுதியாகவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரம் பேரளவில் தனிமைப்பட்டுள்ளனர்.

இதனை விடவும் பாரிய அளவிலேயே கடற்படை கொத்தணியில் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அதுபோல இதனையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் பொய்யான தகவல்களை இணையதளங்களில் பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: