சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறவில்லை – யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா

Wednesday, April 27th, 2016

யாழ்ப்பாணத்தில் தற்போது சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறுவதில்லை. சம்பந்தப்படும் சிறுமியின் சம்மதத்துடனேயே இடம்பெறுகின்றது என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற சிவில் சமூக குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில், பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறைப்பாடு என்ற விகிதத்தின் பதியப்படுகின்றது. பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடாக வராமல் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அனைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் என்றே அறிக்கையிடப்படும்.

துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறுவதில்லை. பாதிக்கப்படும் பெண் பிள்ளையின் சம்மதத்துடன் இவை இடம்பெறுகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் இதுபோன்ற துஷ்பிரயோக வழக்கில் 51 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமியின் சம்மதத்துடன் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போதைய சிறு பிள்ளைகள் பாலியல் சார்ந்த விடயங்களில் விழிப்பற்று இருக்கின்றனர். இதற்கு பொலிஸார் என்ன செய்ய முடியும்? பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். சில பிள்ளைகள் தாம் பருவமடைந்ததைக்கூட அறியாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண் பிள்ளைகளின் முறைப்பாட்டை பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள யாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: