சிறுவர்கள் பயமின்றி வைத்திய ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியை பெற முடியும் – குழந்தைகள் வைத்திய நிபுணர் அருள்மொழி தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021

சிறுவர்கள் தமக்கு வழங்கப்படுகின்ற பைசர் தடுப்பூசியை எவ்வித பயமுமின்றி வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைகள் சிறப்பு வைத்திய நிபுணர் அருள்மொழி தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் 12 தொடக்கம் 19 வயது வரையானவர்களில் நாள்பட்ட நோய்கள் உடையோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கு முதற்கட்டமாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது கொழும்பு குருநாகல் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப் படுவதுடன் அதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசியின் அடுத்த கட்டமாக 12 தொடக்கம் 19 வயதினருக்கு வழங்கப்படுவதுடன் மூன்றாம் கட்டமாக 12 தொடக்கம் 15 வயது உடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இலங்கையில் சிறுவர் களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஆனது உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்ற வைத்திய ஆலோசனைகள் நெறிப்படுத்தல் களைப் பின்பற்றி தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்திற்கும் விரைவில் பைசர் தடுப்பூசி பொற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை சுகாதாரத் தரப்பினர்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

ஆகவே பெற்றோர்கள் சிறுவர்களுக்குத் தடுப்பூசிகளை  பெறும்போது குழந்தை வைத்திய நிபுணர்கள் அல்லது பொது வைத்திய நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே

பாடசாலைகளை அடுத்த மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான  பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்

மேலும் பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: