ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!

Tuesday, February 9th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குலால் பாரிய உயிர் சேதங்களும் சொத்தழிவுகளும் ஏற்பட்டிருந்தன.

அதனையடுத்து இடம்பெற்ற பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் குறித்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஆணைக்குழு ஒன்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்ற ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது முடிவுற்றுள்ளதாகவும், அது தெடர்பான அறிக்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபகசவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்லேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களது விபரங்கள் குறித்து அறியப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் பேராயர் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: