இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, September 8th, 2023

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரின் செயற்பாடுகள் இன முரண்பாடுகளை தூண்டிவிடும் வகையில் இருந்தவரவதால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிவாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (08.09.2023) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்ட ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில் –

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்த தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் திட்டமிட்டவகையில், ஓர் இனவாத அடிப்படையிலேயே இவ்வாறாக நீதிமன்ற தீர்ப்பை மீறியுள்ளார்.

இவ்வாறான அரசின் உயர் நிலை அதிகாரிகள் செயற்படுகின்ற வேளையில் அரசாங்கம் மூவின மக்கள் வாழும் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவது என்பது ஒரு சவாலாகவே இருக்கும்.

அதேபோன்று மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான இனவாத கண்ணோட்டத்துடன் கருத்துக்களை வெளியிடுவதும் செயற்படுவதும் தேசிய நல்லிணக்கம் என்பது உருவாகுவதற்கான முயற்சிகளுக்கு பாரிய தடையாகவே இந்துவருகின்றது

அரசில்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளுக்காகவும் தமது அரசியல் இருப்புக்காகவும் இதேபோன்ற இனவாத மதவாத பிரதேச வாத கருத்துக்களை அவ்வப்போது ஆக்ரோசமாக வெளியிடுவதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அரச இயந்திரமான அரச உயர்நிலை அதிகாரிகள் உயர்ந்த கல்வியாளர்களாகவும் சமூகத்துக்கு ஒரு வழிகாட்டடியாகவும் நாட்டை நிர்வகிக்கின்ற பொறுப்பும் உள்ளவர்களான இவர்கள் இவ்வாறாக நீதிமன்றங்களுடைய கட்டளைகளை உத்தரவுகளை கடைப்பிடிப்பதும் அதை செயற்படுத்தவதும் அவர்களது முக்கிய பணியாகும்.

ஆனால் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து நீதிமன்றத்தின் கண்டனத்தக்கும் உள்ளாகியுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் அப்பொறுப்பில் இருப்பதென்பது மரபல்ல.

இதன் தார்ப்பரியங்களை விளங்கிக்கொண்ட அரசு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பாரிய பணியை மேற்கொண்டுவரும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான இனவாத, மதவாத கண்ணோட்டத்துடன் செயற்படும் பணிப்பாளரை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்

அவ்வாறான சூழல் அமையும் பட்சத்தில்தான் தேசிய நல்லிணக்கம் சாத்தியம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இந்த நாட்டில் உருவாகும் என்றும் அவர் மேலும்’ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: