சிறுவன் பலி : மட்டக்களப்பு வைத்தியர்கள் மூவர் உட்பட அறுவர் கைது!

Wednesday, July 24th, 2019

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் வைத்தியர்கள் மூவர் உட்பட அறுவர் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறுவரும் இந்த சம்பவத்தின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன் என்ற சிறுவன், கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின்போது, அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் காயம் தீவிரமடைந்தமையினால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகமாகி வந்த சிறுவன், மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுவனின் கிட்னி பகுதியில் சிறிய கசிவு ஏறபட்டுள்ளதாகவும் எனினும் அதனால் எந்த பாதிப்பும் இல்லையென்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பெற்றோர் வைத்தியரிடம் விசாரித்துள்ளனர்.

இதன்போது குறித்த சிறுவனுக்கு தவறான இரத்தம் ஏற்றப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தம் மாற்றி ஏற்றியதால்தான் கிட்னி இரண்டும் பாதிப்படைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக உயிரிழந்த சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக 18ஆம் திகதி தனக்கு தெரிய வந்ததாகவும் தனது மகன் 19ஆம் திகதி உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதாலேயே தனது மகன் மரணித்ததாக பொலிஸாருக்கு அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மட்டு. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே.கணேசலிங்கம் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் இன்று கைது செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட அறுவரும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: