நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டால் 4000 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

Saturday, May 6th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் ஆழமாக்கப்படாத காரணத்தினால் 4000 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டால் 4000 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.

நந்திக்கடலை தமக்கு ஆழமாக்கிதருமாறு கடந்த ஆறு ஆண்டுகாலமாக மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற போதிலும், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

நாட்டில் இறால் பெருக்கம் மிகுந்த பகுதியாக நந்திக்கடல் விளங்கிவரும் நிலையில் அப்பகுதியில் நிரம்பியுள்ள சேறு மற்றும் சகதிகாரணமாக தொழிலாளர்கள் தமது தொழிற்றுறைகளை முன்னெடுப்பதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

நந்திக் கடலினை ஆழமாக்கித் தருமாறும், வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்துத் தருமாறும் சமாசத்தால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இக்கடலினை நம்பி நீராவிப்பிட்டி, வற்றாப்பளை, கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், செல்வபுரம், முல்லைத்தீவு நகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4000 க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

நந்திக்கடல் பகுதியை ஆழமாக்கிக் கொடுப்பதனூடாக குறித்த தொழிற்றுறையினை நம்பிவாழும் மக்கள் உரியபலா பலன்களை அனுபவிக்க முடியுமென்பதுடன், அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் முன்னேற்றம் காணமுடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: