சிறுபோகத்துக்கான பசளைகளை உரிய காலத்துக்குள் விநியோகிக்க நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, February 4th, 2022

சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப முறைமைகள் பயன்படுத்தப்பட்டு,  தேசிய அளவில் சேதனப் பசளை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதனால், அவற்றின் பயன்பாடுகள் தொடர்பில் விவசாயிகளுக்குரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமை காரணமாகவே, கடந்த போகத்தின்போது பல விவசாயிகள் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

இம்முறை அந்தக் குறைகளைத் தவிர்த்து,  விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் ஊடாக விவசாயப் பெருமக்களுக்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

எந்தக் காரணம்கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழியமைக்கக் கூடாது. அது தொடர்பான நம்பிக்கையை விவசாயிகள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் எதிர்கொண்ட வெற்றியளிக்காத அனுபவங்கள் காரணமாகவே, சேதனப் பசளை விவசாயத்துக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: