சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் மக்கள் சிரமம்!

Thursday, July 12th, 2018

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்கு தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலமை இன்னமும் தொடர்கின்றது என்று அங்கு செல்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிகாலை 3 மணிக்குச் சான்றிதழ் பெறவருபவர்கள் கிட்டத்தட்ட மதியம் ஒரு மணி வரையில் காத்திருக்கின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகைதரும் இந்த நிறுவனத்தில் வருபவர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகளும் போதுமானதாக இல்லை. கிட்டத்தட்ட 22 கதிரைகளே காணப்படுகின்றன. நூற்றுக்கணக்கானவர்களில் ஏனையவர்கள் கால்கடுக்க நிற்கின்றனர்.

கடந்த வாரமும் இவ்வாறு மக்கள் காத்திருக்க மருத்துவர் மதியம் 12.30 க்கு வருகைதந்து 1.30 மணிக்கே புறப்பட்டு விட்டார் என அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் கூறுகையில் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்தவாறு உள்ளன. எமக்கான நிலைய மருத்துவர் வருகைதரும் நேரம் 8.30 மணி. பணியாளர்கள் வருகைதந்து 8 மணிக்கு அடையாள எண்களை (டோக்கன்களை) வழங்குகின்றனர்.

எனினும் மருத்துவ அறிக்கைகளை பெறவருபவர்கள் அதிகாலைகளிலே வந்து காத்து நிற்பதற்கு எம்மால் பொறுப்புக் கூற முடியாது. வாடகைக் கட்டடத்திலேயே மருத்துவ நிலையம் இயங்கி வருகின்றது. தேவையான பொருள்கள் தொடர்பாக நாம் மேலிடத்துக்கு அறிவித்துள்ளோம். இருந்தும் பயன் கிடைக்கப்பெறவில்லை. இதனாலேயே வருபவர்கள் வெயிலிலும் கால்கடுக்கவும் நிற்க வேண்டியுள்ளது. குறித்த தினத்தில் எமது மருத்துவர் விடுமுறையில் இருந்தார். எனவே மற்றைய பகுதிநேர மருத்துவர் வருகை தந்தே சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் அதிகாலை வேளையில் வந்து காத்து நிற்காமல் உரிய நேரத்துக்கு வருகைதந்து சேவையைப் பெறுமாறு கோரப்படுகின்றார்கள் என்று தெரிவித்தார்.

Related posts: