சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Monday, December 18th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..
பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பிரபல்யமான கருத்துக்களை வெளியிடும் எவரும் கடினமான தீர்மானங்களை எடுக்கத் தயாரில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்பதாலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாகவும் வலியுறுத்தினார்.
கண்டி மாநகர சபையின் “கரலிய அரங்கம்” மற்றும் கலைக்கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (17) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கண்டி மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு ”கரலிய அரங்கம் மற்றும் கலைக் கூட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்காக மாநகர சபை நிதியினால் சுமார் 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த அரங்கம் மற்றும் கலைக் கூடத்தை உருவாக்குவதன் மூலம், நகரில் இது வரை காணப்பட்ட கேட்போர்கூட குறைபாடு தீர்க்கப்படுவதோடு சித்திர, சிற்பக் கண்காட்சிகளுக்கும் வசதிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


