அதியுச்ச வெப்பம் – ஐரோப்பாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

Thursday, July 25th, 2019

ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பநிலை காணப்படுகின்றமையினால் அங்கு வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெப்பக்காப்புத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவிவரும் நிலையில் பிரான்சின் போர்தோ நகரில் அதி உச்ச வெப்பநிலையாக 41.2 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

உலகின் பருவநிலை மாற்றமே இவ்வாறான வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரித்தானியாவில் நாளை கடுமையான வெப்ப நிலை நிலவும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களை மிகவும் அவதானத்துடன் வீட்டில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ஹீத்ரோ பகுதியில் 36.7 பாகை செல்சியஸ் என்ற வெப்பநிலையே உயர்ந்த வெப்பநிலையாகப் பதிவாகியிருந்தது.

எனினும், நாளைய வெப்பநிலை அதனைவிட உயர்வாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளைய தினம், 39 பாகை செல்சியஸ் ஆக வெப்பநிலை இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கென்ட் கவுண்டியின் ஃபேவர்ஷாமில் 38.5 பாகை செல்சியஸ் என்ற வெப்ப நிலையே மிக உயர்வான வெப்பநிலையாக பதிவாக உள்ளது.

எனினும், நாளைய தினம் அதனை மீறிய வகையில் வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் நாளைய தினம் கடுமையான வெப்ப நிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது பிரான்சின் போர்தோ நகரில் அதி உச்ச வெப்பநிலையாக 41.2 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில். பெரும்பாலும் குளிரான காலநிலைக்கு பழக்கப்பட்ட ஐரோப்பிய வாழ் மக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக குளிரான பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் இருப்பதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: