சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023

இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்தினால் திருகோணமலை சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில் 135 மெகாவோட் சூரிய சக்தி திட்டத்தை 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முதற்கட்டமாக, 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 50 மெகாவோட் சூரிய மின்சக்தித் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், சம்பூரில் இருந்து கப்பல்துறைக்கு 23.6 மில்லியன் டொலர் செலவில் 220 கிலோவாட் மின்சார விநியோக கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளது.இந்த கட்டத்தை 2024 முதல் 2025 வரை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 72 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மேலதிகமாக 85 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் கட்டமை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 42 மில்லியன் டொலர் செலவில் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரை 220 கிலோவோட் திறன் கொண்ட 76 கிலோமீற்றர் நீளமான விநியோக கட்டமைப்பு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி கைச்சாத்தானது.

திகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில், திருகோணமலை, சம்பூர்பகுதியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா ௲ இலங்கை அரசாங்கங்களிடையே 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கைச்சாத்தானது

எனினும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த இடத்தில் சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: