சமூகத்தில் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் – சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Thursday, February 10th, 2022

தற்போது பதிவாகி வரும் கொரோனா நோயாளர்களுக்காக சுமார் 7,000 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரொன் திரிபுடன் கூடிய கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக தற்போது இடைநிலை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கான தேவைப்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் சமூக இடைவெளியை முறையாக பேண முடியாத சந்தர்ப்பங்களில், முகக்கவசங்களை முறையாக அணிதல் மற்றும் தொற்றுநீக்கியை பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளை கட்டாயமாக கடைபிடிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதிலிருந்து தவறும் பட்சத்தில் கொவிட் தொற்று மேலும் பரவலடைந்து நிலைமை மோசமடைவதற்கு வழிவகுக்கக்கூடும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட நபர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.

சமூகத்தில் கொவிட் அறிகுறிகள் வெளிகாட்டும் தொற்றாளர்களை காட்டில் எவ்வித அறிகுறிகளை கொண்டிராத கொவிட் தொற்றாளர்களே அதிகளவில்  அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக அனைவரும் ஒன்றிணைந்து முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: